முப்பது வருசத்தில் நூற்றுக்கும் கொஞ்சம் அதிகமான கவிதைகள் எழுதியிருப்பவன் நான். நான் சரளமான எழுத்தாளன் அல்ல. சரளமான எழுத்தாளனாக இல்லாமல் போனதுக்குக் காரணம் நான்தான். என் கவிதைதான். ஒரு கவிதை மாதிரியே இன்னொரு கவிதை இருக்கும் என்கிறபோது அதை எழுத வேண்டாம் என்னும் கட்டாயத்தை நானே உருவாக்கிக்கிட்டு இருக்கிறேன். ஒருமுறை பயன்படுத்திய மொழி மாதிரி நான் இன்னொருமுறை பயன்படுத்தினால் அந்தக் கவிதையை எழுத வேண்டாம் என்ற தீர்மானத்துக்கு வந்தேன். ஒருவர் எழுதின அனுபவம் மாதிரியே நான் எழுத வேண்டி நேரும் அப்படின்னா அந்த மாதிரியான கவிதைகளை நான் தவிர்த்தேன். அதனால் கவிதை எண்ணிக்கையைக் குறைச்சுக்கிட்டே வந்திருக்கேன்.
அது பற்றியான வருத்தம் எல்லாம் இல்லை. இருபத்தைந்து வருசம் எழுதியுமே கவிதைமேல் இருக்கும் காதல் ஏன் குன்றாமல் இருக்கிறது என்னும் கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக்கிட்டிருக்கேன். தெரியவில்லை. ரொம்பச் சின்ன வயசிலேயே கவிதை உள்ள வந்துட்டதால் அதுமேல இருக்கிற நேசம் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கலாம். வேறு எதையும்விட என்னைச் சரியாக வெளிப்படுத்திக்கொண்டேன் எனத் தோன்றும் இடம் கவிதை தரும் இடமாக இருக்கலாம். இவை எல்லாமே கவிதையைத் தொடரக் காரணமாக இருக்கின்றன. கவிதை எப்படி உருவாகிறது என்பது தொடர்ந்து புதிராகத்தான் இருக்கிறது.
பலமுறை யோசித்துப் பார்த்தால் சிலசமயம் ஒரு வரி வந்து இந்தக் கவிதையைத் தொடர்ந்து கொண்டுபோயிருக்கும். சில சமயம் படிமம் கவிதையைக் கொண்டுபோயிருக்கும். சில சமயம் வெறுமனே ஒரு சந்தம் மட்டும் கொண்டு போயிருக்கும். ஒவ்வொன்றுக்கும் உதாரணம் சொல்ல முடியும். 'கையில் அள்ளிய நீர்' என்கிற கவிதையை முதலில் அறுபது வரிகள் எழுதியிருப்பேன். ஆனால் எதுவுமே நிறைவாகத் தோன்றாததால் கிடப்பில் போட்டுவிட்டேன். வேறொரு நாள் அந்தப் படிமம் திரும்பத் தோன்றியபோது இப்போது இருக்கிற ஆறேழு வரிகள் மட்டும்தான் மிஞ்சின. அந்தக் கவிதையை அதே வடிவத்தில் தக்கவச்சுக்கிட்டேன். இது கவிதை வந்த ஒரு வழி.
சிலது சித்திரங்களாக வரும். போபால் பற்றிய விஷயத்தில் அந்த ஆட்கள் ஓடிவரக்கூடிய ஒரு விஷயம். அது எனக்குக் கிடைத்த ஒரு காட்சி. அதேபோலக் கொஞ்ச காலம் ரொம்பப் பயணம் செய்யக்கூடிய தொழிலில் நான் இருந்தேன். அப்போது நான் பார்த்த ஒரு காட்சி. நீலகிரி மலையில் நிறைய மரங்கள் வெட்டப்பட்டு அடுக்கிக் கிடந்தன. எனக்கு இந்த இரண்டு காட்சிகளுக்கும் ஏதோதொடர்பு இருப்பதாகத் தோன்றியது. அதுதான் ‘இந்த நூற்றாண்டில் மூன்று காட்சிகள்’ என்னும் கவிதை. யார்கிட்டேயோ ஏதோ கேள்வி கேட்கும்போது சும்மா ‘ச்சோ’ அப்படீன்னு ஒலிக்குறிப்ப மட்டுமே பதிலாத் தந்தாங்க. அது ஒரு கவிதையை முழுக்கவுமே கொடுத்திருக்கு. ‘பெயர்களின் கவிதை’ என்பது. எழுதி முடித்ததும் கவிதை என்னை விட்டுப் போயிடுது. அது வாசகனுடையதாக ஆயிருது. இருந்தாலும் இது எப்படி வந்தது என்ற கேள்வி தொடர்ந்து இருந்துக்கிட்டேதான் இருக்குது. அந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காதவரைக்கும் நான் கவிதை எழுதிக்கிட்டேதான் இருப்பேன். அந்தக் கேள்விக்குப் பதில் கிடைச்சிருச்சின்னா கவிதை எழுதுவதை நிறுத்திக்குவேன்
- சுகுமாரன்
நன்றி : செல்வராஜ் ஜெகதீசன்
0 கருத்துகள்