சிங்கப்பூர் அடையாளத்துக்கு தாய்மொழி அவசியம்
தமிழ் மொழி விழாவில் அமைச்சர் ஆல்வின் டான் வலியுறுத்து
சிங்கப்பூர் அடையாளத்தையும் சமூகப் பிணைப்புகளையும் கட்டிக்காக்க தாய்மொழி அவசியம் என்று கலாசார, சமூக துணை அமைச்சர் ஆல்வின் டான் வலியுறுத்தியுள்ளார். தாய்மொழிகளே முந்தைய தலைமுறைகளையும் வருங்காலத் தலைமுறைகளையும் இணைக்கும் பாலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இதனால் தான், வளர்தமிழ் இயக்கம், சிங்கைத் தமிழ்ச் சங்கம் போன்றவை நாட்டு நிர்மாணப் பாதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தமிழ் மொழி விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறினார். கடந்த வியாழக்கிழமை பெக்கியோ சமூக மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் குறும்பட போட்டியின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச்சர் பேசியுள்ளார். நிகழ்ச்சியில் ஃபேஸ்புக், யுடியூப் தளங்களில் நேற்று நேரலையில் ஒளிபரப்பானது .
கொவிட்-19 கொள்ளை நோய் சூழலில் சமூக அமைப்புகள், வளர்தமிழ் இயக்கத்துடன் - இணைந்து புது வழியில் தங்கள் நிகழ்ச்சிகளைப் படைத்து வருவது ஊக்கமளிக்கிறது.” என்றார் அமைச்சர்.
"இது புதிய சூழலில் சமூக ஈடுபாட்டுடன் அனைவரும் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய சிங்கப்பூரின் திறனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது." என்று வர்த்தக தொழில் துணை அமைச்சருமான
திரு ஆல்வின் டான் கூறினார்.
“வளர்தமிழ் இயக்கம், சிங்கைத் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றுடன் ஏனைய பங்காளித்துவ அமைப்புகளும் இளையர்களுக்கு விறுவிறுப்பான திட்டங்களை இணைந்து முன்னெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன, என்று அவர் தெரிவித்தார். அமைப்புகள் முன்னெடுக்கும் முயற்சிகள் தமிழ் மொழி மீதும் பாரம்பரிய தமிழ்க் கலைகள், கலாசாரம் மீதும் ஆர்வத்தைத் தூண்டும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிங்கைத் தமிழ்ச் சங்கம் குறும்படப் போட்டி இந்த ஆண்டின் தமிழ் மொழி விழாவை ஒட்டி இடம்பெற்ற 25 நிகழ்ச்சிகளில் ஒன்றாக இடம்பெற்றது. இந்தக் குறும்படப் போட்டிக்கு பங்கேற்பாளர்கள் கொடுக்கப்பட்ட திருக்குறள், பழமொழிகளைக் கருப்பொருளாகக் கொண்டு குறும்படங்களைத் தயாரிக்க வேண்டும்.
“இந்த சுவாரசியமான சவால் இளையர்கள் தமிழ் மொழியில் பயிற்சி பெற உதவுவதுடன், திரைப் படக் கலை மூலம் அவர்கள் தமிழ் மொழி , கலைகள்,
கலாசாரத்தைப் போற்றவும் வகை செய்கிறது. குழந்தைகளுக்கும் இளையர்களுக்கும் நமது பாரம்பரியம், மொழி, கலாசாரப் பண்புகளை வழங்குவதற்கும் அவர்களுக்கு இவற்றில் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும்." என்று அமைச்சர் ஆல்வின் டான் குறிப்பிட்டார்.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைமையில் சமூக அமைப்புகளால் நடத்தப்படும் தமிழ் மொழி விழா, வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஒரு விழாவாக நடைபெறும். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளி லும் பல்வேறு சமூகத்தினரின் ஒன்றுகூடல்களால் வார இறுதிகளில் களைகட்டும் இவ்விழா, இந்த ஆண்டின் கொவிட் சூழலை முன்னிட்டு, நிகழ்ச்சிகள் இணையத் தளங்களில் அரங்கேறின. நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கிய தமிழ் மொழி விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது.
நிகழ்ச்சியின் நிறைவு அங்கமாக கவிமாலையின் 'கவியாடும் முன்றில்' எனும் நிகழ்வு அரங்கேறியது.அனைத்து வயதினருக்குமான தமிழ் மொழி விழா நிகழ்ச்சிகளில் இளைஞர்களின் பங்கெடுப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்