இளம்
எழுத்தாளர்கள் ஊக்குவிப்பு திட்டம் பயிற்சி வகுப்பு ஏப்.1-ல்
தொடக்கம்
மத்திய அரசின் இளம் எழுத்தாளர்கள்
ஊக்குவிப்பு திட்டத்தின் பயிற்சி வகுப்புகள் ஏப்.1-ம் தேதி முதல்
தொடங்கப்படவுள்ளன.இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக்
கொண்டாடும் வகையில் மத்திய அரசு சார்பில் 'அம்ரித்மஹோத்சவ் என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க
உள்ளன. அதில் தேசிய கல்விக்கொள்கையின் வழிகாட்டுதலின்படி இளம் எழுத்தாளர்கள்
ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜன.31-ல் அறிமுகம்
செய்தார். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 23 மொழிகளில் அதிக அளவில்
எழுத்தாளர்களை உருவாக்கவும், இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை
வெளிக்கொணரவும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கட்டுரை, கவிதை, கதை, நாடகம் உட்பட பல்வேறு வடிவங்களில் எழுத இளம்
எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.அதன்படி மொத்தமுள்ள 23 மொழிகளுக்கு தலா
6பேர் வீதம் 230 எழுத்தாளர்கள் மற்றும் தேர்வுக்குழு நேரடியாக தேர்வு செய்யும் 20 பேர் என மொத்தம் 250
இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தேசிய புத்தக
அறக்கட்டளை மூலம் 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும்.
முதல்கட்டமாக அவர்களுக்கு இணையவழியில் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். பிறகு ஒவ்வொரு மொழியிலும் பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் 6 மாதம் வரை தொடர் பயிற்சி தரப்படும். 2-வது கட்டமாக கல்வி திருவிழாக்கள், புத்தகக் கண்காட்சிகள், கலாச்சார பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் எழுத்தாளர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் இளம் எழுத்தாளர்கள் எழுதும் நூல்கள் தேசிய புத்தக அறக்கட்டளையின் மூலம் வெளியிடப்படும். அவற்றில் சிறந்த புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு பிற நாட்டு மொழிகளிலும் மாற்றம் செய்து வெளியிடப்படும். குழந்தை எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகையும் தரப்படும். இதற்கான பயிற்சிவகுப்புகள் ஏப்.1-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்பும் எழுத்தாளர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் முழுவிவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
~ ~ ~
யாழன் ஆதி எழுதிய "ஒளியிருள்" கவிதைத் தொகுப்பு வாங்க !
0 கருத்துகள்